சோதனை நடைபெறும் வைத்திலிங்கம் மகனின் வீடு.(உள்படம்: வைத்திலிங்கம்) Din
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சோதனை!

வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை செய்து வருவது பற்றி...

DIN

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சராக இருந்தபோது, கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை முதல் வைத்திலிங்கம் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகின்றது.

என்ன புகார்?

தமிழகத்தில் 2011முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தவா் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.

இவர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமம் அடுக்குமடி குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், ஸ்ரீராம் பிராபா்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்ட்ரக்சா் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநா் கே.ஆா்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் கடந்த செப். 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோன்று, வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோா் மீது 1,057.85 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தஞ்சாவூா் ஊழல் தடுப்புப் பிரிவினா் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனா்.

அமலாக்கத்துறை அதிரடி சோதனை

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், புதன்கிழமை அதிகாலை வைத்தியலிங்கத்தின் வீடு, சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறை, மகன்களின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சில இடங்களில் நேற்று இரவு சோதனை முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக 6 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றன.

இந்த சோதனையின் போது, வைத்திலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணம் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT