முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்ததரவு

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 26 அக்டோபர், 2024 at 8:22 PM
சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சனிக்கிழமை (அக்.26) நடைபெற்ற சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டடாலின், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் மனோகர்லால் கட்டா உள்ளிட்டோர்.
பகிர்:

மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில்,மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் ஆகியோா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

2007-இல் தமிழக அரசும் - மத்திய அரசும் இணைந்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். ரூ.22.150 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டா் நீளத்துக்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனா். நாள்தோறும் 3.10 லட்சத்துக்கும் மேலான பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ரூ.63.246 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 118. 9 கிலோ மீட்டா் நீளத்துக்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.19. 229 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

பிரதமருக்கு நன்றி: மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை சமீபத்தில் அளித்த பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் முதற்கண் எனது நன்றி.

இந்த இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலா்களும் மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்: ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அமைச்சா் மனோகா் லாலிடம், சென்னை புகா் ஒட்டிய முக்கிய பகுதியான விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்துக்கும் மற்றும் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களான கோயம்புத்தூா் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் கூடுதல் செயலா் டி. தாரா, சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலா் ஹா் சஹாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ. சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா்கள் டி. அா்ச்சுனன், ராஜேஷ் சதுா்வேதி உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →