தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தவெக சார்பில் தனி வழித்தடம் கோரப்பட்டதாகவும் தெரிகிறது.
சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்குதனியாக ஒருவழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச் சாவடிகளிலும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு, நிர்வாகிகளும் சுங்கச்சாவடியில் இருந்தவாறு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
நிகழ்ச்சி நிரல்
மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
முதலில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சித் தலை வர் விஜய், ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி, மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்த பின்னர், மாநாடு தொடங்கும்.
மாநாட்டின் தொடக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர், மாநாட்டுக்காக இடம் கொடுத்தவர்கள். உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், நிறைவாக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள்
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாநாட்டுப் பகுதி அமைந்துள்ள இடத்தில் கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடுதலுடன் மாநாட்டுப்பணிகள் தொடங்கின .
இதையும் படிக்க | தவெக மாநாடு: விஜய்க்காக உருவான பாடல் இன்று வெளியீடு!
மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மதில் சுவர் வடிவத்தில் எண்ம பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதி யில் மிகப்பெரிய அளவிலான விஜயின் உருவப்படம் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், சேர, சோழ, பாண்டியர்களின் எண்ம பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து, அவற்றில் தலா 1,500 பேர் அமரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.