மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றாா் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் கவுதமன், சாட்சிகளின் விசாரணை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டதால் இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.