முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடுக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள்  புறக்கணிக்கப்போவதாக  அறிவித்துள்ளன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
ஆளுநர் ஆா்.என்.ரவி
பகிர்:

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கொடுக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள்  புறக்கணிக்கப்போவதாக  அறிவித்துள்ளன.

குடியரசு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிகழ்வில் தமிழக முதல்வர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என முக்கியமானவர்கள் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் குடியரசு நாளான ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "நமது நாட்டின் குடியரசு தினத்தையொட்டி வருகின்ற (ஜனவரி 26-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக (26.01.2024) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில், திமுக தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments