பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது
ஐபிஎல்: குஜராத் அணி படுதோல்வி!
ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அசத்தியது.
தர்மசாலாவில் ஹிமாசல பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை(மே 26) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இறுதி ஆட்டத்துக்கான முதலாவது தகுதிச் சுற்று (குவாலிஃபையர் 1) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி அபாரமாக விளையாடி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
படுதோல்வியடைந்துள்ள ஜிடி, இரண்டாவது தகுதிச் சுற்று (குவாலிஃபையர் 2) ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து எதிரணியை மலைக்கச் செய்தது. கேப்டன் ரஜத் படிதார் அதிகபட்சமாக 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
அடுத்து, இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய முக்கியமான ஆட்டத்தில், ஜிடி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்ஷண் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவருடன் இணையாகக் களமிறங்கிய கேப்டன் ஷுப்ம்ன் கில் 7 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ் குமார் பந்துவீச்சில் போல்டாகி அந்த அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தார்.
அவர்களைத் தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லரின் அவருக்கே உரிய அதிரடி ஆட்டத்தைப் பார்த்தபோது, இந்த ஆட்டம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர், ஹேசில்வுட் பந்துவீச்சில் போல்டானது 2-ஆவது இன்னிங்சில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் 11 பந்துகளில் அதிரடியாக விளையாடி 29 ரன்களைத் திரட்டினார்.
அவருக்கடுத்து, நிஷாந்த் சந்து, ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான் என அடுத்தடுத்து விக்கெட்கள் மளமளவென சரிய ஆர்சிபியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது.
ஆயினும், தனியொருவனாக அணியை மீட்க போராடிய ராகுல் திவேதியா அரைசதம் கடந்தார். இதனால், அந்த அணியால் படுமோசமான தோல்வியைத் தவிர்க்க முடிந்தாலும், தோல்வியைத் தவிர்க்க திவேதியாவின் அரைசதம்(68) கைகொடுக்கவில்லை.
கடைசி 4 ஓவர்களில் ஜிடி அணிக்கு தேவைப்பட்ட ரன் ரேட் ‘30.25’ என மாறியதால், குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் அந்த அணியின் வெற்றி எட்டாக்கனியானது. இறுதியில், ஜிடி அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.