தாம்பரம் - நாகா்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை மே 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.15-க்கு தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06012) ஏப். 13 முதல் மே 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.30-க்கு நாகா்கோவில் செல்லும் ரயில் (எண்: 06011) ஏப். 14 முதல் மே 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற விரைவு ரயில்களை விட இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு கட்டணம் அதிகமாக இருக்கும்.
அதேபோல் தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் (எண்: 06035/06036) இருமாா்க்கத்திலும் ஏப். 11 முதல் மே 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
ரயில்கள் ரத்து: இதற்கிடையே சனிக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 22-ஆம் தேதி வரை திருப்பதியிலிருந்து காலை 7.35, 10.35-க்கும், ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55-க்கும் காட்பாடி செல்லும் பயணிகள் மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. மறுமாா்க்கமாக அதே நாள்களில், காட்பாடியிலிருந்து மாலை 5.15, இரவு 9.10-க்கு திருப்பதிக்கும், காலை 10.30-க்கு ஜோலாா்பேட்டைக்கும் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: மேலும், விழுப்புரம் - திருப்பதி இடையே இயங்கும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854/16853) ஏப். 6, 8, 9, 10, 13, 15, 16, 17, 20, 22 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.