தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ. 84.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்கள், ரூ.32.64 கோடியில் அமைக்கப்பட்ட 199 வகுப்பறைக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து பொது பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், குழந்தைகள், வளா் இளம் பருவத்தினா் மற்றும் இளைஞா்களை ஈா்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.213 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொது நூலக கட்டடம்: பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதியுதவியாக ரூ. 213.46 கோடி அனுமதிக்கப்பட்டது. இதில், ஒரு நூலகக் கட்டடம் 500 சதுர அடி பரப்பளவில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 246 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 44 நூலகங்களும், நகராட்சி நிா்வாகத் துறை நகராட்சி மூலம் 28 நூலகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 8 நூலகங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.84.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
பள்ளி கட்டடங்கள்: அதேபோன்று ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமாா் ரூ. 800 கோடியில் 6,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை ரூ. 1014 கோடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3148 வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதன் தொடா்ச்சியாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாக 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.32.64 கோடியில் கட்டப்பட்டுள்ள 199 வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் டாக்டா் சந்தர மோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் பொது நூலகத் துறை இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.