தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

மாநிலங்கள் பிச்சைக்காரர்களா எனக் கேட்டாரே மோடி.. ஆனால் இப்போது?: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா என குஜராத் முதல்வராக இருந்தபோது பிரதமர் மோடி கேட்டாரே என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

DIN

பொன்னேரி: மத்திய அரசிடம் கையேந்த மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா? என்று முதல்வராக இருந்தபோது கூறிய மோடி இப்போது நாங்கள் அழுவதாகக் கூறுகிறார் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரியில் இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்துக்கு அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வளவு கொடுத்தாலும் இங்கே இருப்பவர்கள் அழுகிறார்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நாங்கள் கேட்பது அழுகை அல்ல, நான் மிகுந்த அடக்கத்துடன் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது ஒன்றைத்தான். கையேந்தி நிற்க மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என்ன? என்று நீங்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறேன். குஜராத் முதல்வராக இருந்தபோது, மோடி மத்திய அரசைப் பார்த்து இவ்வாறுதான் கேட்டார்.

ஆளுநர் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்றார். ஆனால், இப்போது மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.

நீங்கள் கேட்டதையே, இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறேன் என்பதா? நான் கேட்பது அழுவது அல்ல, தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல, ஊர்ந்து சென்று பதவி கேட்பவனும் அல்ல. உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறினார்.

அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்தே தமிழ்நாடு போராடி வருகிறது. தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்க மாட்டோம்.. தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது, நீட் விலக்கு உள்ளிட்டவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளிப்பாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக திமுக உள்ளது. மற்ற மாநிலங்களில் செய்வதைப்போல தமிழ்நாட்டில் செய்ய முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. திசைமாறிச் சென்றவர்கள், திசைக் காட்டியாக உள்ள எங்களைப் பார்த்து குறை சொல்ல வேண்டாம்.

தொடர்ந்து பேசிய முதல்வர், திருவள்ளூர் மாவட்டத்துக்கான திட்டங்கள் குறித்தும் பேசினார்.

கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மட்டுமே, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், உங்கள் திருவள்ளூர் மாவட்டத்துக்கு எவ்வளவோ பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம். அதையெல்லாம் முழுவதுமாக பட்டியலிட்டால், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும். அதனால், சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாக நான் சொல்ல விரும்புகிறேன்.

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் நிலையப் பணிகள் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மெட்ரோ பணிகள் இப்போது பட்டாபிராம் வரை நீட்டித்து தரப்பட்டிருக்கிறது.

குத்தம்பாக்கத்தில், புதிய பேருந்து முனையம்

திருத்தணியில், புதிய பேருந்து நிலையம்

திருவள்ளூரில், புதிய பேருந்து நிலையம்

மா-நல்லூரில் மின்வாகனப் பூங்கா

திருவொற்றியூரில் கடற்கரை மேம்பாட்டுப் பணிகள்

திருவொற்றியூர் குப்பத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம்

பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம்

கவரப்பேட்டை - சத்தியவேடு சாலைப் பணிகள்

திருவள்ளூர் - அரக்கோணம் சாலை நான்குவழிச் சாலை ஆகப் போகிறது.

60 சிறுபாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்னேரி - கவரப்பேட்டை இடையே ரயில்வே மேம்பாலம்

திருவள்ளூரில் அறிவுசார் நகரம்

திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுகிறது.

சின்ன நொளம்பூரில், உயர்மட்டப் பாலம்

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, 173 கோடி ரூபாயில்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருப்பணிகள்183 கோடி ரூபாயில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள் 52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் திருப்பணிகள்  18 கோடி ரூபாயில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசாமி கோயில் திருப்பணிகள்

அம்பத்தூரில் தொழிலாளர் தங்கும் விடுதி

திருமழிசை துணைநகரத் திட்டம்

78 மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்

- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் மலைப்பாகதான் இருந்தது. அனைத்துத் திட்டங்களையும் திருவள்ளூருக்கே திருப்பி விட்டுவிட்டார்கள் என்று கூட நினைத்தேன். அமைச்சர் நாசர் அந்தளவுக்குத் தன் மாவட்டத்துக்கு திட்டங்களைக் கேட்டு, வாங்கி சாதனை படைத்திருக்கிறார்.

இன்று 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இன்று திறந்து வைத்திருக்கின்ற திட்டங்களின் மொத்த மதிப்பு 418 கோடி ரூபாய்.

2 இலட்சத்து 2 ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு 357 கோடி ருபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறேன். அந்த வகையில், ஒட்டு மொத்தமாக கூட்டிப் பார்த்தால்,1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இது நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT