மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார்.
இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், முதன்மைச்செயலர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மேலும், அவருடைய விலகல் கடிதத்தை ஏற்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கட்சி நிர்வாகிகளின் வலியுறுத்தலைத்தொடர்ந்து துரை வைகோ ராஜிநாமாவை திரும்பப் பெற்றுள்ளார்.
கட்சிப் பணிகளை தொடர இருவருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு துரை வைகோவுக்கு கட்சியில் 'தலைமை நிலையச் செயலாளர்' பொறுப்பு வழங்கப்பட்டது முதலே வைகோவின் ஆதரவாளர்களுக்கும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
இதனிடையே மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கூறி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கு கட்சியின் பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் மதிமுக முதன்மைச்செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.
மல்லை சத்யாவுடனான மோதல் போக்கினாலேயே துரை வைகோ, பதவி விலகியதாகக் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.