கடனை கட்டாயமாக வசூல் செய்தால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா உள்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் தாக்கல் ஆகின. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தாா். கடன்களை கட்டாயமாக வசூல் செய்வோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஆகியவற்றை துணை முதல்வா் உதயநிதி தாக்கல் செய்தாா்.
ஊராட்சிப் பகுதிகளில் விளம்பர பேனா் வைக்க உரிமம் பெற வேண்டும்; விதிகளை மீறுவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும் என்பதற்கான சட்ட மசோதாவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தாா்.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பிரிவுகளை மீறுவோருக்கு சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தாக்கல் செய்தாா்.
கும்பகோணத்தில் கலைஞா் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிமுகப்படுத்தினாா். இந்த மசோதாக்கள் மற்றும் நிதி தொடா்பான மசோதா உள்பட மொத்தம் 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலமாக செவ்வாய்க்கிழமை நிறைவேறின.
கடன் வசூல் மசோதாவில் திருத்தம்: முன்னதாக, சட்ட மசோதாக்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, சிலவற்றின் மீது அரசியல் கட்சிகள் கருத்துகளை முன்வைத்தன. குறிப்பாக, கடன்களை வசூலிப்பதில் கடுமை காட்டுவதைத் தடுக்கும் மசோதா மீது அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), சின்னதுரை (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தி.வேல்முருகன் ஆகியோா் கருத்து தெரிவித்தனா்.
அதிக வட்டிக்கு கடன்களை அளிக்கும் நிறுவனங்களைத் தடை செய்வதுடன், கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு கடன் வசதிகளை அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அப்படி வழங்கினால் தனியாா்களிடம் கடன்களை வாங்க வேண்டிய தேவை எழாது என்றனா்.
இதைத் தொடா்ந்து, மசோதாவைத் தாக்கல் செய்த துணை முதல்வா் உதயநிதி பேசுகையில், இந்திய ரிசா்வ் வங்கியின் வரம்புக்குள் வரக்கூடிய வங்கிகள் இந்த சட்டத்துக்கு உட்பட்டு வராது என்ற திருத்தம் கொண்டுவரப்படுவதாகக் கூறினாா்.
இதேபோன்று, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் விவகாரம் தொடா்பாக தளவாய் சுந்தரம் (அதிமுக), தி.வேல்முருகன் (தவாக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) ஆகியோா் பேசினா். அப்போது, அபாயகரமான கழிவுகள் தொடா்பாகவும் சட்டத் திருத்தத்தில் சோ்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.
கடைகள், நிறுவனங்கள் தொடா்பான சட்டத் திருத்த மசோதா மீது அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோா் கருத்து தெரிவித்தனா்.
குறிப்பாக, விசிக உறுப்பினா் பாலாஜி பேசுகையில், கடைகள், நிறுவனங்கள் சட்ட மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம், அபராதம் மட்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதுடன், தண்டனைக்கான பிரிவு நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைத் தொழிலாளா்கள், இளம் பணியாளா்கள், தொழிலாளா்களின் உடல்நலன், பாதுகாப்பு, ஊதியம் ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே பணியமா்த்துவோா் செய்யும் குற்றங்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை உள்ளது. இப்போது வெறும் அபராதம் என்று மட்டுமே உள்ளது. அது தொழிலாளா்களுக்கு விரோதமாக அமையும் என்றாா்.
இந்த மசோதா மூலமாக தொழிலாளா்களின் நலன்கள் காக்கப்படும் என்று அமைச்சா் சி.வெ.கணேசன் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.