சாத்தூர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே முத்தாண்டியாபுரத்தில் ரகுநாதன்(50) என்பவருக்குச் சொந்தமான தனலட்சுமி என்ற பெயரில் இயங்கி வந்த தீக்குச்சி தயாரிப்புக் கிடங்கு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த தீக்குச்சி கிடங்கில் இன்று(புதன்கிழமை) அதிகாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புப்படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை நேரம் என்பதால் உள்ளே யாரும் இல்லாததன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், ரகுநாதன் என்பவருக்குச் சொந்தமாக கரிசல்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் காரணமாக சமீபத்தில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தற்போது வெடி விபத்து ஏற்பட்ட கிடங்கில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மின் கசிவு காரணமாகவோ அல்லது பட்டாசு தயாரிக்கும்போதோ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உரிமையாளர்கள் மணிசங்கர் குருநாதன் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | 'உங்க அன்ப புரிஞ்சுக்குறேன்.. ஆனால்..!' - தவெக தலைவர் விஜய் பதிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.