சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கும் கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும்.
சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைப்பதற்கான பணிகள் இந்தாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை - வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ரூ. 877.59 கோடியில் மயிலாப்பூா் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடா்ந்து 3-ஆம் கட்டமாக 2008-ஆம் ஆண்டு பரங்கிமலை - வேளச்சேரி இடையே 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 4.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்தப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணிகள் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் திருவான்மியூர், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாக செல்ல முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.