தில்லியில் நடிகை மீரா மிதுனை காவல் துறையினர் இன்று (ஆக. 4) கைது செய்தனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது, தில்லி காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன், ஆக. 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின்கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரின் நண்பர் சாம் அபிஷேக்கையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியான பிறகு, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இதனிடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்ததால், அவரைப் பிடிக்க முடியாத காவல் துறை மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
தில்லியில் மீரா மிதுன் உள்ளதாகவும் அவரை மீட்டுத்தரக் கோரி, அவரது தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் தில்லி நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தில்லி காவல் துறையால் மீரா மிதுன் இன்று (ஆக. 4) கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தற்போது தில்லியில் உள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை, ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.