முதலீட்டாளர்கள் மாநாட்டில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிறப்பு அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று(ஆக. 4) முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி பகுதியை “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக” உருவாக்கும் வகையில், பல்வேறு பசுமை ஹைட்ரஜன், சோலார் செல் உள்ளிட்ட உற்பத்தி திட்டங்களை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
இப்போது கூட வின்ஃபாஸ்ட் உற்பத்தியை தொடங்கி வைத்துவிட்டுதான், இந்த மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பான நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் வளர்ச்சிக்காக 4 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.
முதல் அறிவிப்பு - தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இரண்டாவது அறிவிப்பு - கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும். அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.
நான்காவது அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: இணையம் முழுக்க அகரம் சூர்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.