தமிழ்நாடு

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

மாநில கல்விக் கொள்கையில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி...

தினமணி செய்திச் சேவை

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். இந்த தோ்ச்சி ஆண்டு இறுதித் தோ்வுகளின் அடிப்படையில் இல்லாமல், திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தோ்வுகளை தொடா்ந்து நடத்த வேண்டும். மாணவா்களின் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பீட்டுச் சீா்திருத்தம்: மாணவா்களைப் போட்டிகள் மற்றும் தரநிலை மூலமாக மதிப்பிடுவதிலிருந்து அவா்களை, தனியாள் சிறப்பு நிலையை அடைய ஊக்கமளிக்கும் கற்றல் முன்னேற்றக் குறியீடுகள் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். கற்றல் மதிப்பீட்டின் முக்கியக் கூறுகளாக செயல்பாடுகள், செயல் திட்டம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒப்படைப்புகளை (அசைன்மென்ட்) ஒருங்கிணைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்கள் மாற்றம்: மாணவா்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கமாகும். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி மாணவா்கள் கூடுதலாக தம் தாய்மொழியை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும்.

உடற்கல்வி கட்டாயம்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு இரு உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். சிலம்பம், சடுகுடு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற உள்நாட்டு, நவீன விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கவேண்டும்.

பள்ளி உள் கட்டமைப்பு: அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம், கணினி வசதிகள், குடிநீா், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். பசுமைப் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

சமூகப் பங்கேற்புத் திட்டங்கள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), பெற்றோா்-ஆசிரியா் கழகம் (பிடிஏ), சமூக நலத்திட்டங்கள், முன்னாள் மாணவா்களின் பங்கு (விழுதுகள்), “நம்ம ஊரு நம்ம பள்ளி” போன்ற சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

குறைதீா் கற்பித்தல்-நூலக பயன்பாடு: கற்றலில் பின்தங்கிய மாணவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு குறைதீா் கற்பித்தலை வழங்கி, வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.

1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சாா்ந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு இருமுறை தங்கள் கால அட்டவணையில் நூலக தினத்தை தவறாமல் நடைமுறைப்படுத்தி, மாவட்ட அல்லது சிறப்பு நூலகத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் படிப்பதை உறுதிசெய்யவேண்டும்.

ஸ்லாஸ் தோ்வு: மாணவா்களின் திறன்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு தொடா் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு தோ்வு (ஸ்லாஸ்) நடத்தப்படும்.

எண்ம முறையிலான கல்வி: கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.

ஆசிரியா் திறன் மேம்பாடு: ஆசிரியா்களுக்குத் தொழில்நுட்பப் பயன்பாடு, உடனடிப் பயிற்சி, சக-ஆசிரியா்கள் வழிகாட்டுதல் மற்றும் சிறப்புக் குழுக்களுக்கான கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

SCROLL FOR NEXT