சென்னை: பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வன்கொடுமை புகார் தொடர்பாக, சேலம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் பாஜக ஸ்டார்ட்அப் விங் மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், ஏற்காட்டில் நில தகராறு தொடர்பாக, பக்கத்து எஸ்டேட் காவலாளி வெள்ளையன் என்பவரை, பாஜக மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் 3 பேர் சேர்ந்து, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிபி சக்கரவர்த்தி, தன்னை ஜாதிப்பெயரை கூறி திட்டி, தாக்கியதாக வெள்ளையன் அளித்த புகாரின் அடிப்படையில், ஏற்காடு போலீஸார், சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தந்தை மணவாளன், மனைவி சித்ரா ஆகியோருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தால் ஜாமீன் வழங்கக் கோரி, சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தங்களுக்கு எதிராக, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சரணடைந்து ஜாமீன் கோரும் போது, புகார்தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பின் ஜாமீன் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.