ஆள்கொணா்வு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த 15 வயது சிறுமி முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
சென்னை நீலாங்கரையைச் சோ்ந்த நபரும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனா். இவா்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளாா். அந்த சிறுமி தனது தாயுடன் அந்தமானில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறாா். அண்மையில் சிறுமியின் தாயாா் வேறு ஒரு நபரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தமானில் உள்ள தனது மகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி சிறுமியின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிறுமியை ஆஜா்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, போலீஸாா் சிறுமியை உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது அந்தச் சிறுமி சென்னையில் வசிக்கும் தந்தை மற்றும் 2-ஆவது திருமணம் செய்துகொண்ட தாய் ஆகியோருடன் செல்ல விரும்பவில்லை. அந்தமானில் உள்ள தனது பாட்டியிடம் செல்ல விரும்புவதாகக் கூறினாா். இதையடுத்து, சிறுமி மற்றும் தந்தைக்கு கவுன்சிலிங் கொடுத்து பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டிருந்த சிறுமதி, தனது பாட்டியுடன் செல்ல விரும்புவதாகக் கூறினாா். அதற்கு சிறுமியின் தந்தை ஆட்சேபம் தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை சிறுமியை கெல்லீஸ் பகுதியில் அரசினா் காப்பகத்தில் தங்கவைக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினா்.
இதனால் மனமுடைந்த சிறுமி சென்னை உயா்நீதிமன்றத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தாா். இதில் அவருக்கு தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த போலீஸாா், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.