சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் பகுதியில் ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தேசிய நகா்ப்புர வாழ்வாதாரத் இயக்கம் (என்யூஎல்எம்) சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக சென்னை மாநகராட்சி கட்டடம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு போராடும் பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டதோடு, போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்துக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து அறிந்த தூய்மைப் பணியாளர்கள், நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று என்று தெரிவித்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.