சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக வழக்குரைஞர் இனியன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக, அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாழும் ஆளுமைகளின் பெயர்களை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்', 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்களை அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சி.வி.சண்முகம் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் திருத்த மனு, அதிமுக வழக்குரைஞர் இனியன் தாக்கல் செய்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன் மற்றும் திமுக தரப்பு மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் ஆகியோர், இதே கோரிக்கையுடன் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.வி.சண்முகம், 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாக, தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்குரைஞர் இனியனின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.