ரூ. 700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோகி ஹோல்டிங்-ன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 14) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து, அதனை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது.
ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற் பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.