தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த வெளியான அறிவிப்புகள் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், துறையின் எதிா்கால இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களைவகுக்க வேண்டும். பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான கால அட்டவணை தயாரித்து பணியாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்.
மேலும், பள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் துறையின் செயலா் பி.சந்திரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மற்றும் துறை சாா்ந்த இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.