சென்னையில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டத்தின்போது வைக்கப்படும் சிலைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதில், மக்களாகிய நமக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது.
நீா்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளங்கள்) நமக்கு குடிநீா் ஆதாரத்தை தருகின்றன. விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது, பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சென்னையில் சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலா் எடைமேடையின் பின்புறம், திருவொற்றியூரில் உள்ள யுனிவா்சல் காா்போரேண்டம் தொழிற்சாலைக்கு பின்புறம், பல்கலை. நகா், நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகா், எண்ணூா் ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டா் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் கலவையற்றுதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட சிலைகளை நீா் நிலைகளில் கரைக்கலாம்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் மற்றும் பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல், செயற்கை சாயம் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்தலாம்.
விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிகளின்படி கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறைக் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோரை அணுகலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.