மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநாடு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும் மறக்க முடியாத் தருணங்கள் தந்த மதுரை மாநாட்டு வெற்றிக்கான நன்றிக் கடிதம் இது.
விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் இரண்டாவது மாநில மாநாடான ‘வாகைசூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்த அளவு பேரன்பு காட்டும் உங்களை என் உறவுகளாகப் பெற என்ன தவம் செய்தேனோ? கடவுளுக்கும் மக்களுக்கும் என் மனத்தின் ஆழத்திலிருந்து கோடானு கோடி நன்றி.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும், உறவு காக்கும் மதுரையில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
மதுரையில் கடல் வந்து புகுந்தது போல இருந்தது, நம் மாநாட்டுக் காட்சி. கபட நாடக மற்றும் பிளவுவாத சக்திகளை அரசியல் மற்றும் கொள்கை அளவில் நின்று உறுதியாக நாம் எதிர்த்ததைக் கடல்கள் சேர்ந்து கை தட்டியதைப் போல மக்கள் மனப்பூர்வமாக வரவேற்றது, கல்வெட்டாக மனத்தில் பதிந்தது. இது நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கி உள்ளது. அதை இனி நாம் சற்றும் சமரசமின்றிச் செய்வோம். அதனை உறுதிப்படுத்த 'செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி' என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.
எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து, ஜன நெருக்கடி சிறிதும் இல்லாத வகையில் நிலம் தேர்வு செய்வதில் இருந்து மாநாடு முடியும்வரை தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைத்துப் பணிகளையும் சிறப்புடன் மேற்கொண்ட கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பில் பணியாற்றிய தமிழ்நாடு காவல் துறை, அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் பாதுகாப்புக் குழுவினர், அனைத்து ஊடகத் துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி.
மாநாட்டு வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்கிய நம் கட்சித் தோழர்களுக்கும், நம்மோடு இணைந்து நிற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நிரந்தர மலர்கள் கொண்டு தூவி, நெஞ்சார்ந்த நன்றியறிதலை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம்.
மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே, நமது நிரந்தர அரசியல் நிலைப்பாடு. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.
மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம். தூய அரசியல் அதிகார இலக்கை வெல்வோம்.
1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நம் தமிழ் மக்கள் நமக்காக நிகழ்த்திக் காட்டப் போவது நிச்சயம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.