கோவை கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இருவர், மாணவிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி அந்த பள்ளி மாணவிகள் பேசிய விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தி வருவதுடன் குற்றம்சாட்டப்பட்ட 2 ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை திமுக அரசு அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வருவதோடு, தவறான முறையில் சீண்டி பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக மாணவிகள் குற்றஞ்சாட்டி காணொளி வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளியில் புகார் அளித்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு, செய்முறைத் தேர்வு மதிப்பெண்ணையும் குறைத்துவிடுவர் என்று மாணவிகள் காணொளியில் பேசுவது அரசுப் பள்ளிகளில் பாலியல் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
வேலியே பயிரை மேய்ந்தது போல.. அரசுப் பள்ளி ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவது ஏன்? மாணவிகள் தைரியமாக புகார் அளிக்கக்கூட திராவிட மாடல் ஆட்சியில் இடமில்லையா?
ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் கல்வி தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் பொதுப்புத்தியில் இருக்கையில் தற்போது மாணவிகளுக்கு பாதுகாப்பும் இருக்காது என்று கருத்து உருவாகிவிடாதா? அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கைகழுவுவதுதான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
'அப்பா' என்ற பட்டத்தை உரிமை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பாரா? மேலும், தக்க விசாரணை நடத்தி கிணத்துக்கடவு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.