தவெக மாநாட்டில் விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"என்னைப் பொருத்தவரை அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சேர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
அதிமுகவை எம்ஜிஆர், மக்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார். அதனை ஜெயலலிதா திறம்பட வழி நடத்தினார். அந்த வழியில் வந்த இயக்கத்தை யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அது முடியாது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக மட்டுமே வாக்கு கேட்பேன். தனிப்பட்ட முறையில் தனக்கு எந்த இலக்கும் இல்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதிமுக எப்போதும் மக்கள் இயக்கம்தான். அதை யாராலும் சிதைக்க முடியாது. கூட்டணி குறித்து தேர்தலின்போது தெரியும். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது.
ஒரு அரசியல் கட்சியை நடத்துபவர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரையும் ஒருசேர கருதி அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும். விஜய்யின் பேச்சில் சில கருத்துகள் ஏற்புடையதாக அல்ல. மாநாட்டில் விஜயின் கருத்துகள் அரசியல் ரீதியாக ஈர்க்கும் கருத்தாக இல்லை. அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் நாகரிகம் கருதி பேச வேண்டும்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.