சிபிஐ 
தமிழ்நாடு

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் அண்மைக் காலமாக தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கடத்தலுக்கு சுங்கத் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலா் துணைப் போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் கடந்த மாா்ச் மாதம் 4-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் வந்தபோது, அவரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீா் சோதனை செய்தனா். இதில், அவா் கடத்தி வந்த தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்து ரன்யாராவை கைது செய்தனா்.

விசாரணையில் குறிப்பிட்ட காலத்துக்குள் 27 முறை துபை சென்று வந்ததும், அப்போது பல கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த வழக்கின் விளைவாக ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டன.

அதேவேளை இந்தக் கடத்தல் குறித்து சிபிஐ தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, தங்கம் கடத்தலுக்கு நடிகை ரன்யா ராவுக்கு உதவிய அரசு உயா் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில், சென்னையில் இருக்கும் சில சுங்கத் துறை அதிகாரிகளுக்கும், நகை வியாபாரிகளுக்கும் தொடா்பு இருப்பது சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் சென்னை மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை, செங்கல்பட்டு உள்பட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். மீனம்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் வசிக்கும் சுங்கத் துறை அதிகாரிகள் வீடுகளிலும், பூக்கடை பகுதியில் தனியாா் நகைக்கடை உரிமையாளா் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

சோதனை முழுமையாக முடிவடைந்து, ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களைத் தெரிவிக்க முடியும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT