சென்னை அருகே நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் அருகே கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 24 மணி நேரமாக சென்னை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இது அடுத்த 18 மணி நேரம் சென்னை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு மாலை முதல் இரவு வரை மேலும் வலுவிழந்து, சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும்.
இந்த அமைப்பு சென்னையின் அட்சரேகைக்கு மேலே நகரவில்லை, இது சென்னையின் அட்சரேகைக்குக் கீழே இருக்கும் வரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் இன்று(டிச. 2) முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக மேகங்களைப் பெற்று, நீர் அலைகள்போல உடைந்து போகும்.
மிதமான மழை:
இந்த அமைப்பு தென்தமிழகத்தை கடந்து டெல்டா கடற்கரை வரை செல்கிறது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் வரை செல்கிறது.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி கரையைக் கடந்ததும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
கனமழை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக கனமழை:
மீண்டும் இந்த அமைப்பு மாலையில் சென்னைக்கு தெற்கே கரையைக் கடக்கும்போது, இரவு முழுவதும் மழை நீடிக்கும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.