தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சாலைவலத்துக்கு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்திருப்பது சரியான முடிவுதான் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கரூரில் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி விஜய் சாலைவலம் மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், விஜய்யின் சாலைவலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, புதுவை ஐஜி ஏகே சிங்களாவை நேரில் சந்தித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கடிதம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, விஜய் சாலைவலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆனந்த் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுவை பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்ததாவது:
”கரூரில் மிகப் பெரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் சாலைவலத்துக்கு அனுமதி மறுத்திருப்பது சரியான முடிவுதான். தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியில் பெரிய சாலை அமைப்பு கிடையாது. மிகக் குறுகிய சாலைகளே புதுவையில் இருக்கின்றது.
தவெகவினர் அனுமதி கேட்டிருப்பது மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் பகுதி. சாலைவலத்தை தவிர்த்துவிட்டு பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். சாலைவலத்தை தவிர்க்க வேண்டும் என்று தவெகவினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இதுதொடர்பாக முதல்வரிடமும் வேண்டுகோள் வைத்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.
சாலைவலத்துக்கு அனுமதி கோரும் வழித்தடம்
காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக விஜய் சாலைவலம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் விஜய் உரையாற்றவுள்ளார் என்றும், காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.