வாழப்பாடி: தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்திய போலி மருத்துவர் பிடிபட்டுள்ளார்.
இடைத்தரகர் உள்பட இரு பெண்களையும் மருத்துவக் குழுவினர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகம் முழுவதும் காரில் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி, கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனத் தெரிவித்த போலி மருத்துவர் மற்றும் இடைத்தரகர் உள்பட மூவரை, மருத்துவக் குழுவினர் இன்று(டிச. 2) செவ்வாய்க்கிழமை பிடித்து வாழப்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், நவீன ஸ்கேன் இயந்திரத்தை காரில் வைத்துக் கொண்டு நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி, ஒருவருக்கு ரூ.30,000 வரை கட்டணம் வசூலித்துக் கொண்டு, கருவுற்ற பெண்களின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? எனத் தெரிவித்து, ஒரு குழு தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாக மருத்துவக் குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்தக் குழு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரில் முகாமிட்டு கருவுற்ற பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்து வருவதாக மருத்துவத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சேலம் ஊரக மருத்துவ இணை இயக்குநர் நந்தினி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார், சேலம் சுகாதார மாவட்ட மருத்துவ அலுவலர் யோகானந்த், வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பேளூரில் முகாமிட்டனர்.
அப்போது, பேளூர் தனியார் திருமண மண்டபம் பின்புறம் உள்ள மாரியம்மாள் என்பவரது வீட்டிற்கு காரில் ஸ்கேன் கருவியை கொண்டு வந்த, விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது அந்த வீட்டிற்குள் புகுந்து ஸ்கேன் பரிசோதனை செய்த வெங்கடேஷை கையும் களவுமாகப் பிடித்த மருத்துவக் குழுவினர், அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட விலாரிபாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி லதா மற்றும் வீடு வாடகைக்கு கொடுத்த பேளூர் சக்திவேல் மனைவி மாரியம்மாள் ஆகிய மூவரையும் பிடித்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை வாழப்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த வெங்கடேஷ் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு போலி மருத்துவராக வலம் வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார், இந்தக் குழுவிடம் இருந்த ஸ்கேன் பரிசோதனை கருவிகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சென்னை ஏரிகளில் நீர் இருப்பு விபரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.