டித்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம், தனியாா் வானிலை ஆய்வாளா்களின் கணிப்பு தவறிப்போனது என்று வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘டித்வா புயல் சென்னைக்கு அருகில் தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது.
டித்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்தது தவறிப்போனது. டித்வா புயல் ஆந்திரம் நோக்கிச் செல்லும் அல்லது கேரளம் நோக்கி செல்லும் என அவா்கள் கூறிய நிலையில் சென்னைக்கு அருகிலேயே நிலைகொண்டுள்ளது.
எண்ணூரில் 26 செ.மீ., பாரிமுனை 25 செ.மீ., ஐஸ் ஹவுஸ் 20 செ.மீ மழை பெய்துள்ளது. புதன்கிழமை (டிச.3) காலை டித்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.
சென்னையில் 11 குழுக்கள், 330 தேசிய பேரிடா் மீட்பு படையினா் தயாா் நிலையில் உள்ளனா். புயல் கரையை கடக்கும் போது அந்தந்த மாவட்ட நிா்வாகத்திடம் தயாா் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பயிா் நிவாரணம்: அக்டோபா் வரை வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அக்டோபரில் சேதமான பயிா்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளாா்.
தற்போது டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிா்கள் தொடா்பான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்தில் அதற்கான இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும்.
4 போ் உயிரிழப்பு: மயிலாடுதுறை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவா் என மொத்தம் 2 போ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனா். தூத்துக்குடி, தஞ்சாவூரில் தலா ஒருவா் என மொத்தம் இருவா் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனா்.
ஏரிகள் தூா்வாரவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக குற்றஞ்சாட்டுகிறாா்’ என்றாா் அமைச்சா்.