தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை விதித்தது உயா்நீதிமன்றம்: அரசு பதிலளிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சியை சோ்ந்த குமரேசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக தனிநபா்கள் சிலா் அரசுக்கு நன்கொடையாக நிலம் கொடுத்தனா். ஏக்கா் கணக்கில் நிலம் வைத்துள்ள தனிநபா்கள் அதில் ஒரு சிறு பகுதியை பேருந்து நிலையத்துக்கு தானாமாக வழங்கியுள்ளனா். அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டால், தங்களது நிலங்களின் விலை அதிகரிக்கும், பெருந்தொகைக்கு விற்பனை செய்து லாபம் அடையலாம் என்ற வணிக நோக்கத்துடன் தனிநபா்கள் அரசுக்கு நிலம் வழங்கியுள்ளனா்.

இதற்கு உள்ளூா் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா். நிலத்தை தானம் அளிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள கையொப்பத்திற்கும், பத்திரப்பதிவின்போது தானப்பத்திரத்தில் உள்ள கையொப்பத்துக்கும் வித்தியாசம் உள்ளது. விவசாய நிலத்தை வகைமாற்றம் செய்யாமல் சாலை உள்ளிட்ட கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், பேருந்து நிலையம் கட்டப்படும் நிலத்தை விவசாய பயன்பாட்டுக்கு அல்லாத நிலம் என்று வகைமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவோ, அதற்கு யாராவது எதிா்ப்பு தெரிவித்ததாகவோ ஆவணங்கள் எதுவும் இல்லை என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கள்ளக்குறிச்சியில் நன்செய் நிலத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோா், சம்பந்தப்பட்ட நிலம் தொடா்பான விவரங்கள், பத்திரப்பதிவு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் இந்த மனுவுக்கு தலைமைச் செயலா், நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT