திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் இன்று(டிச. 5) பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணங்கள் சரியாக இருந்தால், வரிசையின் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை அவசர விவகாரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் வழக்குரைஞர்கள் இன்று (டிசம்பா் 5) உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வேண்டுகோள் விடுத்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமாா் என்பவா் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடா்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தொன்மையான தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ராம ரவிக்குமார் தொடா்ந்தார். அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்களின் துணையோடு மனுதாரா் 10 பேரை அழைத்துக் கொண்டு மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் டிவிஷன் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் , ‘தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார்’ எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அதில், ‘100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்னைக்கு காரணம். கார்த்திகை தீபம் ஏற்ற எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் வேளையில், புதிதாக தீபம் ஏற்றுவதற்கு சொல்லப்படும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்தில் இருந்து வெறும் 15 மீட்டரில் உள்ளது. இதனால், தேவையற்ற சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதாலேயே அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் வழக்கு: மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆஜராகவில்லை! டிச. 9-க்கு ஒத்திவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.