கரூர்: கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நேரிட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடல் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கரூர் துயர சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் உடல்களை உடல் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம்தேதி தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்குத்தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வந்தநிலையில், சிறப்பு புலனாய்வுக்குழுவினரின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோக்கி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல்மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோரது மேற்பார்வையில் குஜராத் மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் காவல்கண்காணிப்பாளர் முகேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ விசாரணை குழுவை நியமித்தது.
இந்த குழுவினரில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்.19-ம்தேதி முதல் கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்குழுவினர் சம்பவம் நடைபெற்றபோது அங்கு காவல்பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர துணைக்காவல்கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் மணிவண்ணன், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸாரிடமும், ஆம்புலன்வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரது உறவினர்களிடமும் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்ட அவர்கள், கடந்த கடந்த மாதம் 25,26-ம்தேதிகளில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரிடமும் விசாரணை நடத்திய நிலையில், மத்திய மின்வாரிய பவர்கிரீட் அதிகாரிகள், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிபிஐ டிஐஜி அதுல்குமார் தாகூர் மற்றும் நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய சிபிஐ கண்காணிப்பு குழுவினர் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திற்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். இரண்டு நாள் விசாரணைக்கு பின் கண்காணிப்பு குழுவினர் புது தில்லிக்கு திரும்பி சென்றனர்.
இந்நிலையில் கடந்த 4 நாள்களாக நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை உடல் கூராய்வு செய்த தூத்துக்குடி, நாகை மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமையும் 4-வது நாளாக அரசு மருத்துவர்கள் 5 பேரிடம் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் உடல் கூராய்வுக்கு உங்களை அழைத்தது யார், முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டவர்கள் யார் போன்ற கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.