சென்னை: டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்து, அதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் கப்பல் மூலம் நிவாரணப் பொருள்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரண பொருள்கள் அடங்கிய கப்பலை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, இலங்கையில் கனமழை பெய்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான சேதத்தை நாடு சந்தித்துள்ளது. இதுவரை மழை தொடர்பான சம்பவங்களில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மழை தொடர்பான பாதிப்புகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரூ.1.19 கோடி மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள், தமிழக அரசு சார்பில் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்டிருந்த கப்பலை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
புயல் பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருள்களில், 300 டன் சர்க்கரை, 300 டன் பருப்பு, 5,000 புடவைகள், வேட்டிகள், 25 டன் பால் பொருள்கள், போர்வைகள், துண்டுகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நிவாரணப் பொருள்களில் தமிழ்நாடு மக்களிடமிருந்து அன்புடன் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருள்களை, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு, தமிழ் மக்களின் சார்பாக நிவாரணப் பொருள்கள், கடற்படை கப்பலில் அனுப்பப்படுகிறது. இந்திய கடற்படையின் ஒத்துழைப்புப் பணிக்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துகள் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.