கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி 100% உயர்வு: டிச.16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகள் குறித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

இணையதளச் செய்திப் பிரிவு

தாம்பரம் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் மற்றும் திமுக அரசைக் கண்டித்து வருகிற டிச. 16 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற டிச. 16 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடத்தப்பட உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அறிக்கையில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள புகார்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியை உயர்த்துவதில் எவ்வித முறையையும் பின்பற்றாமல், தான்தோன்றித்தனமாக வீடுகளுக்கு 100 சதவீதமும்; வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தியுள்ளது.

தாம்பரம் சானடோரியத்தில் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும், சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான உபரகணங்களும் இல்லை. மேலும், இங்கு குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதியுறுகின்றனர். இங்கு தூய்மைப் பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால், மருத்துவமனை முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட ஏரிகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி, கழிவுநீர் குட்டைகளாக மாறி உள்ளதோடு, பூங்காக்கள் அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது.

மக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில்கொண்டு, அதிமுக ஆட்சியில், மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைத்து அதன்மூலம் மாடம்பாக்கம், சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. கடந்த 55 மாதகால விடியா திமுக ஆட்சியில் மாடம்பாக்கம் ஏரி எவ்வித பராமரிப்பும் இன்றி, கழிவுநீர் கலக்கப்பட்டு மாசடைந்துவிட்டதால், குடிநீருக்கு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மாடம்பாக்கம் பகுதி, பரங்கிமலை (மேற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்தென் ஊராட்சி, மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கோயிலாஞ்சேரி ஆகிய இடங்களில் உள்ள விவசாய விளை நிலங்களை, சென்னை பெருநகர Land Pooling Area Development Scheme (LPADS) என்கிற திட்டத்தின் பெயரில் மொத்தம் 600 ஏக்கர் விவசாய நிலங்களை விடியா திமுக அரசு கையகப்படுத்துவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, காலம் காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டுப் பணிகள், விடியா திமுக ஆட்சி அமைந்தவுடன் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIADMK protest on Dec. 16 in tambaram corporation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

SCROLL FOR NEXT