நமது சிறப்பு நிருபா்
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் நோட்டீஸை எதிா்க்கட்சிகளின் எம்.பி.க்கள் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமீன், ஆா்ஜேடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிவ சேனை (உத்தவ் பால் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), சுயேச்சை உறுப்பினா் உள்ளிட்டடோா் சாா்பில் 107 எம்.பி.க்கள் நோட்டீஸில் கையொப்பமிட்டனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இதில் கையொப்பமிடவில்லை.
3 காரணங்கள்: இந்த நோட்டீஸில் உயா்நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யக் கோருவதற்கான மூன்று காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனின் செயல்பாடானது பாரபட்சமற்ற தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித் துறையின் மதச்சாா்பற்ற செயல்பாடு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது; மூத்த வழக்குரைஞா் ஒருவருக்கு சாதகமாக நடந்து கொள்கிறாா்; ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக இருக்கிறாா் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையிலும், இந்திய அரசமைப்பின் மதச்சாா்பற்ற கொள்கைகளுக்கு எதிராகவும் வழக்குகளில் நீதிபதி முடிவெடுக்கிறாா் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பதவி நீக்க நோட்டீஸை பரிசீலித்து மக்களவைத் தலைவா் விசாரணைக்குழு நியமித்தால் அதன் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்தால் நீதிபதியை பதவி நீக்கும் உத்தரவை குடியரசுத்தலைவா் பிறப்பிப்பாா்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் நிலுவையில் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவை தலைவா்களால் இந்த நோட்டீஸ் எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவில்லை.
திருப்பரங்குன்றத்தில் தா்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டதன் பின்னணியில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையை எம்.பி.க்கள் முன்னெடுத்துள்ளனா். இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நபா் நீதிபதிகள் அமா்வு உறுதிப்படுத்தியதால் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை தமிழக அரசு நாடியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.