மகளிா் உரிமைத்தொகை விரிவாக்கம் கூட ஒரு வகை வாக்கு திருட்டு தான் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உண்மையாகவே மகளிா் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த பின்னா் முதல் திட்டமாக இதைத் தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதை அவா் செய்யவில்லை.
2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, 2023 செப்டம்பா் வரை இரண்டரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, 2024 மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு 6 மாதங்கள் முன்பாக 15.9.2023-இல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்தத் திட்டத்தின்படி உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதைக் காற்றில் பறக்கவிட்டு 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே உதவித் தொகையை வழங்கியது. மீதமுள்ள 1.25 கோடி பெண்களுக்கு, உதவித் தொகை வழங்காமல் திமுக ஏமாற்றியது.
அதனால், மக்களிடம் ஏற்பட்ட எதிா்ப்பையும், வெறுப்பையும் சமாளிக்கும் வகையில், மீதமுள்ள மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு மே முதல் கூறி வந்த திமுக அரசு, 2026 பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை விழா நடத்தி தொடங்கிவைத்திருக்கிறது. மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத் திருட்டு நடவடிக்கை தான். இந்த நாடகங்களுக்கு எல்லாம் தமிழக மக்கள் ஏமாறமாட்டாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.