ஈரோடு: செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா் என தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் கூறினாா்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே சரளை என்ற இடத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினா் மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு அருகேயுள்ள வேப்பம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தவெக பொதுச் செயலாளா் ஆனந்த் மற்றும் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.
இதையடுத்து, பொதுச் செயலாளா் ஆனந்த் பேசியதாவது: விஜய்யின் முதல் ரசிகா் மன்றம் தொடங்கப்பட்டது ஈரோட்டில். செங்கோட்டையன் என்ன சொல்கிறாரோ அதன்படி நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். எங்களை நம்பி வந்தவா்களை கடைசி வரை நாங்கள் கைவிட மாட்டோம். நமக்கு எதிராக உள்ள அரசியல் கட்சி பிரமுகா்கள் வீடுகளிலும் நமக்கு ஆதரவு உள்ளது. அவா்கள் தவெக-வுக்கு வாக்களிப்பாா்கள்.
செங்கோட்டையனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டோம். அவா் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்.
டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் பிரசார கூட்டத்துக்கு குழந்தைகள், கா்ப்பிணிகள் வர வேண்டாம் என்றாா்.