தமிழகத்தில் தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், அரசால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கம், டிச. 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் தமிழகத்தில் கூடுதலாக 17 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 13 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுவந்தது. இவர்களையும் சேர்த்து தற்போது மொத்தமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் இந்த திட்டத்தின் பயனாளிகளாக மாறியிருக்கிறார்கள்.
அன்றைய தினம், சென்னையில் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டான், தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் உரிமைத் தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
மேலும், இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின்போதும், விடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தால், அவர்களும் தகுதியுடையவர்களாக இருப்பின் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் மகிழ்ச்சியான அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டிருந்தார்.
ஸ்டாலின் பேசுகையில், தற்போது மேலும் கூடுதலாக 17 இலட்சம் சகோதரிகளுக்கு அதாவது மொத்தமாக 1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் கூட சில தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று அறிவித்திருந்தார்.
உண்மையில், ஏழை, எளிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய உதவித் தொகையாகவே பார்க்கப்படுகிறது. சிறு சிறு கைத் தொழில் கற்கவும், பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லவும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பெற்றோராலும் உறவினர்களாலும் கொடுத்துதவ முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்கு இந்த உதவித் தொகை மிகப்பெரிய தொகைதான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறையில் இருக்கும் இந்த திட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை உயரும் என்ற முதல்வரின் அறிவிப்பினால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதாவது, மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த உயர்வு இருக்குமா? அல்லது இந்த ஆட்சியின்போதே அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்விகளுடன் பல கேள்விகள் உருவாகியுள்ளன.
அதாவது, மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பினை வெளியிடும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சிலர், ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டு ஆயிரமாக உயருமா? என்று கேள்வி எழுப்பும் நிலையில், அவ்வாறு உயர்த்தப்படுவது சாத்தியமில்லை, முதியவர்களுக்கான உதவித் தொகை திட்டத்தில் உயர்த்தியது போல சில நூறுகள் நிச்சயம் உயர்த்தப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, மகளிர் உரிமைத் தொகையை கடந்த ஆண்டு முதல் பெற்று வருபவர்களுக்கு முதல் கட்டமாக உயருமா, அல்லது இந்த திட்டத்தில் பயனடையும் ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கும் உயர்த்தப்படுமா என்ற சந்தேகமும், புதிதாக இந்த திட்டத்தின் பயனாளிகளான பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பின்பற்றி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகிவிட்டது. மேலும், கர்நாடகம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.