புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
இலவசமாக மடிக்கணினிகள் வழங்குவதை விமர்சிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் உதயநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது!
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி எழுப்பி இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளைப் பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும் – மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது, “கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்,” என்கிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மைகூட இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார்.
ஆனால், முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத்தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது தில்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது.
ஏதோ தேர்தலுக்காக திடீரென லேப்டாப் கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயல்கிறார்.
2025-2026 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, “20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது.
அந்த நிதிநிலை அறிக்கை அவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அதை படித்துப் பார்த்தாரா, இல்லை, வழக்கம்போல வீட்டிலேயே வைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
லேப்டாப் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, லேப்டாப் வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகம், தேசிய தகவல் மையம், ஐஐடி சென்னை மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவைக் கொண்டு, லேப்டாப் உற்பத்தி நிறுவனங்களிடம் மூன்று முறை கலந்தாய்வு கூட்டமும், 7 முறைக்கு மேல் வல்லுநர் குழுக் கூட்டமும் நடத்தி மாணவர்களுக்கு செய்யறிவு(Artificial Intelligence) பயன்பாட்டிற்கு உகந்த வகையில் லேப்டாப் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டு
தொழில்நுட்ப விவரங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, பல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே தங்களுடைய பணியாளர்களுக்கு இனிமேல் தான் Windows 11 Operating System-ஐ வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அரசு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளருக்கு வழங்கப்படக் கூடிய தரத்திலான Windows 11 OS இப்போதே நமது மடிக்கணினியில் வழங்க இருக்கிறது.
இதற்கென எல்காட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நேரடியாக ஓர் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு இருக்கிறார்கள்
மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அறிக்கையில், "இன்றைய ஏஐ காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.
நான் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணத்தைப் படித்த தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த கணினி நிபுணர் என்பதும் இப்போதுதான் தெரிந்தது. அரசின் லேப்டாப் மாணவர்களின் கரங்களுக்கு இனி தான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, நம்முடைய ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை – கட்டமைப்பு(Configuration) சரி இல்லை என்று கதைவிடுகிறார்.
கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக பிராசசர்(Processor) மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி(Battery) என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது.
அமெரிக்காவின் பெர்பிளெக்ஸிட்டி(Perplexity AI) நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி 6 மாத காலத்திற்கு பெர்பிளெக்ஸிட்டி புரோ ஏஐ (Preplexity Pro AI) வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
நாம் வாங்கக் கூடிய லேப்டாப்புகளும் சாதாரண நிறுவனங்களிடமிருந்து வாங்கவில்லை. உலக அளவில் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற டெல், ஏசர், ஹெச்பி ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே, எந்தவித இடையீட்டு நிறுவனங்களும் இன்றி நேரடியாக கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
இப்படி தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு நம் அரசு வழங்க இருக்கிறது.
இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பல வீடுகளில் இன்று வரை நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எனவே, தொழில்நுட்பத்தைப் பற்றியும், தரத்தைப் பற்றியும் அக்கறைக் கொண்டவர் போல ‘கணினி நிபுணர்’ எடப்பாடி பழனிசாமி நடிக்கத் தேவையில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில்தான் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், 2019-லேயே அந்த திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு, மாணவர்களை ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நாடறியும். அதற்கு 2021-லேயே தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டினார்கள்.
மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீடு, அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி சுரண்டல் இவற்றையெல்லாம் திறம்பட எதிர்கொண்டு முதலமைச்சர், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றி வருகிறார்கள்.
ஏற்கனவே காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், வெற்றி நிச்சயம் போன்ற திட்டங்களால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று இந்தியாவே பாராட்டும் நிலையில், லேப்டாப் வழங்கும் திட்டம், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளது.
இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி ஏதேதோ கதைகளைச் சொல்கிறார். அவருடைய நோக்கம், எதையாவது சொல்லி இந்த திட்டத்தை தடுக்க முடியுமா என்பதுதான். அவருடைய எண்ணம் ஒரு போதும் பலிக்காது.
அடுத்து, நம்முடைய முதலமைச்சர் தலைமையில் திராவிட மாடல் 2.0 அரசு அமையும்போது, மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இன்னும் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்பது உறுதி.
எனவே, மாணவர்களுடைய கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளை செய்தால் நன்றாக இருக்கும்.
இல்லையெனில், தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.