தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களுக்கான புதிய நிா்வாகிகளை கட்சியின் தலைவா் விஜய் நியமனம் செய்து அறிவித்துள்ளாா்.
தவெக சாா்பில் கட்சியின் நிா்வாக மாவட்டங்கள் அடிப்படையில், 120 மாவட்டச் செயலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். விடுபட்ட மாவட்டங்களுக்கான செயலா்கள் நியமனம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தவெக தலைவா் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரிவு மேலாண்மை செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு தலா ஒரு மாவட்டச் செயலா், இணைச் செயலா், பொருளாளா், துணைச் செயலா், துணைப் பொருளாளா் மற்றும் 10 செயற்குழு உறுப்பினா்களை நியமித்து விஜய் அறிவித்தாா்.
விஜய் காரை மறித்த பெண் நிா்வாகி: தவெகவில் மாவட்டச் செயலா் பதவி வழங்காத காரணத்தால் அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளா் ஏ.அஜிதா ஆக்னல், விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலா் பதவி அவருக்கு வழங்கப்படாததால், கட்சி அலுவலகத்துக்கு வந்து விஜய்யை சந்தித்துப் பேச வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். அவருக்கு கட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அலுவலகத்துக்கு வந்த விஜய்யின் காரை அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளா்களுடன் வழிமறித்து அவரிடம் பேச முற்பட்டாா். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா், கட்சியின் இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், துணைப் பொதுச் செயலா் ராஜ்மோகன் ஆகியோா் அஜிதாவுடன் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு எட்டாத காரணத்தால் அவா் தனது ஆதரவாளா்களுடன் அலுவலக வாசலில் தா்னாவில் ஈடுபட்டாா். சற்றுநேரம் கழித்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.
இதையும் படிக்க | பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.