அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம் என்று பாஜக பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சென்னைக்கு இன்று வருகைதந்த பியூஸ் கோயல், தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பியூஸ் கோயல் பேசியதாவது:
“சென்னையில் பாஜக - அதிமுக இடையேயான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தலைமை தாங்கும் எனது நண்பரும் சகோதரருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினேன்.
பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதல்படி, வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகள் இணைந்து குடும்பமாக எதிர்கொள்ளப் போகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
அடுத்த சில மாதங்களுக்கான வியூகங்கள் குறித்து விவாதித்தோம். ஊழல் நிறைந்த திமுக அரசால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், தமிழக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வளர்ச்சி, வேலை உள்ளிட்டவை குறித்து பேசவுள்ளோம்.
தமிழக மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கும் அரசாங்கமே தேவை. தமிழகத்தின் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழிலாளர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுப்பதே பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நோக்கமாகும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.