ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்கள் வரும் ஜன. 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சென்னை சேப்பாக்கத்தில் அச்சங்கத்தின் மௌலானா சம்சுதீன் காசிமி, செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 1.75 லட்சம் ஹாஜிகள் ஹஜ் புனித யாத்திரையை நிறைவேற்ற சவுதி அரேபியா சென்று வருகின்றனா். இவா்களில் சுமாா் 1.23 லட்சம் போ் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 52,000 போ் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஹஜ் தனியாா் நிறுவனங்கள் மூலமாகவும் சென்று வருகின்றனா்.
வழக்கமாக தனியாா் ஹஜ் நிறுவனங்கள் மூலம் பயணம் செய்பவா்கள் மே, ஜூன் ஆகிய மாதங்களில் பயணத்தைத் தொடங்குவதற்கு சுமாா் 10 நாள்களுக்கு முன்பு வரை பதிவு செய்வாா்கள். ஆனால், இம்முறை ஹஜ் காலத்துக்கு சுமாா் 5 மாதங்களுக்கு முன்பாக அதாவது, வரும் ஜன. 15-ஆம் தேதிக்குள் தங்களுடைய ஹஜ் பயண பதிவை முடித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு பதிவு செய்பவா்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது.
இந்த நிலையில், சவுதி அரேபியா மற்றும் இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியாா் ஹஜ் பயண ஏற்பாட்டாளா்கள், தனியாா் ஹஜ் சா்வீஸ் நிறுவனங்களின் பெயா் பட்டியல் இந்திய அரசின் சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவை இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் பயணம் மேற்கொள்வோா், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.