அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு, தனது அறிக்கையை இன்று(டிச. 30) முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி, இன்று (டிச. 30) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த. உதயச்சந்திரன், நிதித்துறை துணைச் செயலாளர் (வரவு-செலவு) பிரத்திக் தாயள், குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அரசுப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்து, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் 9 சுற்றுகள் கூட்டங்களை நடத்தி கடந்த செப். 30 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த நிலையில், இன்று முழு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.