முகப்பு
தமிழ்நாடு

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்! பிளவா?

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 31 டிசம்பர், 2025 at 7:37 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்
பகிர்:

காங்கிரஸ் கண்டனம்: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியிட்ட கருத்துகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைவிட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, தவெக தலைவர் விஜய்யுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்திருந்த நிலையில், திமுகவுக்கு எதிரான அவரது பதிவு கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க அகில இந்திய காங்கிரஸ் முயற்சிப்பதாக பரவலான கருத்துகள் வெளியாகின.

Advertisement

இதனிடையே, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தனிநபராக பிரவீன் சக்கரவர்த்தி முயற்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தலைமையிடம் பரிந்துரைத்துள்ளேன்” என்று மிக காட்டமாக செல்வப் பெருந்தகை பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பிரவீன் சக்கரவர்த்தியை விமர்சித்தும், ராகுல் காந்தி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மாணிக்கம் தாகூர் கண்டனம்

திமுக கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகி மீது “நடவடிக்கை எடுக்க” எதிர்கட்சி தலைவருக்கு கோரிக்கை வைத்த செய்தி படித்தேன்.

ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துகளை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?.

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன - பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பி.க்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல - ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை கருத்து

திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து செல்வப் பெருந்தகை பேசியதாவது:

“எங்கள் கட்சியில் என்ன பிரச்னையோ, அதனை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவோ, பாஜக ஆதரவாகவோ பேசியவர்கள் குறித்த புகாரை தலைமையிடம் தெரிவித்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்த விவகாரத்தை தமிழக அரசியல் கட்சிகளும் தோழமைக் கட்சிகளும் பெரிதுபடுத்த வேண்டாம். உள்கட்சி விவகாரத்தில் எந்தவித பிரச்னையையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதனை பெரிதுபடுத்துவதால் யாருக்கும் நன்மை கிடையாது. மேலும், சங்கடத்தைதான் ஏற்படுத்தும்.

திமுக தலைமையில் இருக்கின்ற இந்தியா கூட்டணி சமுத்திரம் போன்றது, கடல் போன்றது. சில அலைகள் அடிக்கதான் செய்யும், ஆனால் அடங்கிவிடும். கூட்டணி பலமாகவும் வலிமையாகவும் இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

summary

Congress condemns DMK alliance partners! A split?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments