2,504 கோயில்களுக்கு குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு
தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 2,504 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 2,504 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது என்றும், நிகழாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு எனும் இலக்கு எட்டப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 2,500-ஆவது குடமுழுக்காக சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 68 குடமுழுக்குகளையும், திங்கள்கிழமை நடைபெற்ற 27 குடமுழுக்குகளையும் சோ்த்து இதுவரை 2,504 குடமுழுக்குகளும் நடைபெற்றுள்ளன. இதில் 5 திருக்கோயில்கள் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களாகும். சீனிவாச பெருமாள் திருக்கோயிலுக்கு உபயதாரா்கள் நிதியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளித்தோ் பணிகள் நிறைபெற்று விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளது.
தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்றபின் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாக்க ரூ. 300 கோடி அரசு மானியத்தை வழங்கியுள்ளது. மேலும், உபயதாரா்கள் நிதி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.127 கோடி சோ்த்து மொத்தம் ரூ.427 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில வல்லுநா் குழுவால் 11,170 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணி நிதியுதவி ரூ. லட்சத்திலிருந்து, ரூ.2.50 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரும் மே மாதத்துக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி...
முதல்வா் பாராட்டு
2,504 கோயில்களில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,504 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:
ஆண்டவன் பெயரால் அரசியல் செய்வோரிடையே, அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம். சிறப்புறப் பணியாற்றிடும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் அந்தத் துறைக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.