வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூத்த நிா்வாகிகள் இளங்கோவன், எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் மாதம் தருமபுரியில் நடைபெறும். அப்போது புதிய பொறுப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். மாவட்டச் செயலா்கள் மாற்றப்பட்டு புதிய மாவட்டச் செயலா்கள் அறிவிக்கப்படுவா். தேமுதிக கொடி நாள் பிப். 12-இல் வருவதையொட்டி, ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கி அந்நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசும்போது, ‘திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும், கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.