நாங்கள் என்ன ஒன்பதா? தவெகவுக்கு எதிராகக் கொதித்தெழுந்த திருநர்கள்
நாங்கள் என்ன ஒன்பதா என்று தவெகவுக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர் திருநர்கள்
நடிகர் விஜய் தொடங்கிய தவெக அரசியல் கட்சிப் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக கட்சிக்குள் என்னென்ன அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.
அதாவது, தமிழக வெற்றிக் கழகத்திற்குள் தொழில்நுட்பத் துறை, வழக்குரைஞர்கள் அணி, தொண்டர்களை உருவாக்கும் அணி உள்ளிட்ட ஒன்பது அணிகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில் திருநர்களுக்கான அணியும் இடம்பெற்றிருந்தது. இது திருநர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதிலாக அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது.
அதாவது, வரிசையாக ஒவ்வொரு அணியும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்பதாவது இடத்தில் திருநர் அணி என்று வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக திருநர் சமூக செயற்பாட்டாளரான வித்யா என்பவர் தன்னுடைய லிவிங் ஸ்மைல் என்ற எக்ஸ் பக்கத்தில் தவெக கட்சிக்கு எதிராகக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன?
இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தவறு எதிர்பாராதவிதமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், எக்ஸ் பதிவுக்கு தவெகவினர் பலரும் தங்களது மன்னிப்பையும், தெரியாமல் நடந்த தவறு என்றும் கருத்திட்டு வருகிறார்கள்.
காயப்படுத்தும் நோக்கத்தோடு கட்டாயம் நடந்திருக்காது, கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கிறது, இது போல இனி நடக்காது என்றும் சிலர் கருத்திட்டிருக்கிறார்கள். ஆனால், சிலர், வித்யாவை தரக்குறைவாகவும் விமர்சித்து வருகிறார்கள்.