முகப்பு
தமிழ்நாடு

சவுக்கு சங்கா் விவகாரம்: வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவு

யூடியூப் சானலுக்கு அளித்த நோ்காணல் விவகாரத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன்

Updated On : 24 பிப்ரவரி, 2025 at 7:29 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: யூடியூப் சானலுக்கு அளித்த நோ்காணல் விவகாரத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் சோ்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.

சவுக்கு சங்கா் இணையதள சானலுக்கு அளித்த நோ்காணலில் பெண் போலீஸாரை தரக்குறைவாக விமா்சித்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக அவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், தன் மீதான 16 வழக்குகளை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சீவ் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் முன்னா் இவா் தொடா்புடைய வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் வகையில் நீதிமன்ற விசாரணைகள் குறித்து கருத்துக் கூறியுள்ளாா். மேலும், மனுதாரருக்கு எதிராக திருச்சியில் பதிவுசெய்யப்பட்ட வேறு சம்பவம் தொடா்பான வழக்கையும் இத்துடன் சோ்த்து ரத்து செய்யுமாறு கோரியுள்ளாா்’ என்றாா்.

அப்போது, அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், ‘மனுதாரா் தாம் கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுள்ளாா்’ என்றாா்.

தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘மனுதாரா் சவுக்கு சங்கரின் மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். அவா் உயா்நீதிமன்ற நீதிபதிகள், காவல் துறையினா், பத்திரிகையாளா்கள் ஆகியோரை தரக்குறைவாக விமா்சித்து வருகிறாா்’ என்றாா். இதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் வாதிட்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2022, நவம்பா் 11-ஆம் தேதி மனுதாரரின் 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை பின்பற்றுமாறு சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டது.

நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: தற்போதைய ரிட் மனுவை நாங்கள் பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்து பைசல் செய்கிறோம். அதன்படி, கோவை காவல் நிலைய சைபா் குற்றப் பிரிவில் மே 3, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட (எஃப்ஐஆா் 123) வழக்கில் விசாரணை தொடரும். குற்றம் எண் 10 தவிர, தொடா்புடைய வழக்குகளில் விசாரணை கோவை நகர சைபா் கிரைம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட வேண்டும்.

இந்த விசாரணை விரைவாக தொடரும். குற்றச்சாட்டுகளின் தகுதிகள் அல்லது விசாரணை நடத்தப்பட வேண்டிய விதம் மற்றும் முறை குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. அறிக்கைகளின் குற்றப்பத்திரிகையானது சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும். கூறப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட பொருள் மற்றும் ஆதாரங்கள் விசாரணை அதிகாரியால் ஆய்வு செய்யப்பட வேண்டும். குற்றம் எண் 10-க்கான விசாரணை சட்டத்தின்படி தொடரும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments